நவகிரகங்களும் மனித துன்பங்களும்
அகத்திய மகரிஷியிடம் பல சீடர்கள் சித்தர் கலைகளை பயின்று வந்தார்கள். ஆனால் இந்த கலைகள் சில மாணாக்கர்களுக்கு எளிதாகவும், சிலருக்கு அரிதாகவும், சிலருக்கு கைகூடாமலும் இருந்தது.
இந்த சங்கடங்களை பற்றி, வித்தை கைகூடாத மாணாக்கர்கள், அகத்திய பெருமானிடம் விளக்கம் தர வேண்டினர். அதற்கு அகத்திய பெருமானும் உங்கள் அனைவருக்குமே இந்த கலைகள் கைகூடும், அப்படி கைகூடாதவர்கள் யாரையும் யாம் சீடர்களாக ஏற்றுக்கொள்வது இல்லை. யாம் சீடர்களாக ஏற்றுக்கொள்ளும் போதே அவரவர்களின் கிரக பலன்களை நன்கு ஆராய்ந்து, இவ்வித்தை இவர்களுக்கு கைகூடுமா? சித்தர் நிலை எய்துவாரா? என்று சோதித்துப் பார்த்த பின்னரே சீடர்களாக ஏற்றுக்கொள்வோம்.
உங்களுக்கு தடைகளும், தாமதங்களும் ஏற்பட உங்களுடைய கிரக தோஷங்களே காரணம். வினைகளால் ஏற்பட்ட கிரக தோஷங்கள் உங்களை செம்மைப்படுத்தாமல் காலத்தை நீட்டிக்கச் செய்கிறது. இதில் விரைந்து பலன் காணவேண்டுமென்றால், உங்களுக்கு தாமதத்தை கொடுக்கும் கிரக தோஷங்களை அகற்றிக் கொண்டாலே போதுமானது.
இதற்குரிய சில வழிமுறைகள், வாசிக்கலை எனப்படும், சுவாசப் பயிற்சியில், கிரக அதிர்வுகளை மாற்றி, நமக்கு சாதகமாக செய்து கொள்ளலாம். இதில் ஒவ்வொரு கிரகத்திற்கும் சில குறிப்பிட்ட உச்சரிப்புகளை உச்சரிப்பதன் மூலம், கிரக பலன்களை பெற முடியும். அதற்கும் முன்னதாக நமது உடல் சாபத்தை சித்தர் குழு தலைவனாம் சிவனாரை வேண்டி, பராபரையை யாசித்து, நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்த அகத்திய பெருமான், உடல் சாபம் நீங்கவும், நவகோள்களின் கெடுபலன்கள் அகலவும், அந்த சீடர்களுக்கு மந்திர உபதேசம் அளித்ததோடு, அனைத்து கலைகளிலும் முன்னேற விரும்பும் எல்லா சீடர்களுக்கும் போதிக்கும் வண்ணம், உபதேச பாடல்களாக தமது நூல்களில் நவக்கிரக சாப நிவர்த்தி எனும் தலைப்பில் எழுதியுள்ளார்.
இந்த மந்திரங்களை வேள்வி முறைகளாக வகுத்து, உச்சாடனம் செய்து, அந்தந்த கிரகங்களுக்குரிய ஆகுதிகள், சமித்துக்கள், தானியங்கள் என்று அளித்து, அதனை வழிநடத்தும் எளிய முறைகளாகத் தொகுத்து, கோரக்கர் பெருமான் சாதாரண மாந்தர்களும் பயன்பெறும் வண்ணம், தமது ஞானப்பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
விதைகளின்றி முளையுமில்லை. காரணங்களின்றி காரியமுமில்லை. ஒவ்வொரு வெளிப்பாட்டிற்கும் அதற்கு முந்தைய உந்துதல்தான் காரணம். அது போன்றுதான் நாம் படுகின்ற துயரங்களும், கஷடங்களும், காரிய தடைகளும், பிணிகளும் எந்தவொரு காரணமுமின்றி இவைகள் நம்மை அண்டுவதில்லை என்பது அன்னையின் வாக்கு.
நமது தவறான சிந்தனைகளாலும், பேராசைகளாலும், சுயநல எண்ணங்களாலும் நாம் வசதிப்பட்ட சூழலில் வாழ்ந்த பொழுது, மற்றவர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் துயரம் அளித்து, மனவேதனை பட வைத்ததே சாபமாகிறது. இதனை இப்பிறப்பிலோ அல்லது முப்பிறப்பிலோ நாம் விதைத்திருக்கலாம்.
இந்த மன வேதனை அதிர்வுகளை உள்வாங்கிய கிரகங்கள், தம்முடைய பலன்தரும் கிரக காலங்களில், நாம் மற்றவர்களுக்கு செய்த அந்த வேதனைகளுக்கேற்ற துன்பங்களை கண்டிப்பாக வழங்குகின்றது. இந்த அதிர்வுகள் சாந்தமடைந்து, துன்பத்திலிருந்து மீளும் பழைய செயல்களை நம்மால் திருப்பிக் கொள்ள இயலாது.
ஆனால் இந்த சாபங்கள் அகல, மனசுத்தியுடன் இறைவனை வணங்கி, தாம் அறியாது செய்த பாவங்களுக்காக மன்னிப்பு வேண்டி, இனி மற்றவர்கள் மனம் துன்புறாமல் வாழ்வதாக உறுதிபூண்டு, துன்பம் தரும் கிரக காலங்களில் அந்த கிரகங்களை அடிவணங்கி, அந்தந்த கிரகங்களுக்குரிய ஆகுதிகளை அளித்து, வேள்வி செய்வதின் மூலம், சகல கிரகசாப துயரங்களிலிருந்தும் விடுபட்டு, காரிய தடைகள், துயரங்கள், கஷ்டங்கள் நீங்கி, பலன்கள் பெறக் காணலாம். கிரக சாபங்களாக வந்த நோய்களும் அகலக் காணலாம்.
இத்தகைய அற்புதமான பெருமக்களால் வழிகாட்டப் பட்ட நவக்கிரக சாப நிவர்த்தி வேள்வியை, விதி பிசகாமல், நமது ஆலயத்தில், அன்னையை நாடி வரும் அன்பர்களுக்காக, அவர்களின் விருப்பத்திற்காக செய்யப்பட்டு வருகின்றது.
கிரக குற்றமுள்ளவர்கள், இந்த வேள்வியை, நமது ஆலயத்தில் புரிந்து, மேற்கூறிய அனைத்து துயரங்களிலிருந்தும் விடுதலை பெற்று, நல்வாழ்வு வாழ விரும்புகிறோம்.
மேற்கூறிய வேள்வி விவரங்கள் யாவும், அன்னையின் அருள் வாக்கில் வெளிப்பட்டு, விபரங்கள், விதிகள் வகுக்கப்பட்டு, வேள்விகள் முறையாக நமது ஆலயத்தில் நடைபெறுகின்றன.