மந்திரப்பாவை தோற்றம்

//மந்திரப்பாவை தோற்றம்
மந்திரப்பாவை தோற்றம்2020-03-05T11:50:54+00:00

மந்திரப்பாவையின் தோற்றம்

இந்தப்பதிவில் நாம் பள்ளிக்கரணை அன்னை ஆதிபரசக்தி ஆலயத்தில் வீற்றிருக்கும் மந்திரப்பாவை அன்னையின் தோற்றத்தைப்பற்றி காணலாம். ஒரு சுவாரசிய கதையை போல் அமைந்து இருக்கும் இந்த பதிவில் வரும் நிகழ்ச்சி, வர்ணனை மற்றும் பாத்திரங்கள் அனைத்தும், பல சித்தர் பாடல்களில் இருந்து நமக்கு கிடைக்கும் குறிப்புகளின் தொகுப்பு.
முதலில் அன்னை மந்திரப்பாவை யார் என்று தெரியாதவர்களுக்கு சில முக்கியமான தகவல்கள்.
அன்னை மந்திரப்பாவை சித்தர்களுக்கெல்லாம் குருவாகவும், காப்பு தாயாகவும் விளங்கும் சக்தி. எங்களுக்கு தெரிந்தவரை அன்னை மந்திரப்பாவைக்கு பள்ளிக்கரணை சக்தி ஆலயத்தைத்தவிர வேறு எங்கும் சந்நிதி கிடையாது. இந்த சந்நிதியில் அன்னையின் கருவறைக்கு முன்னர் 18 சித்தர்கள் யோக நிலையில் அன்னையை வணங்கியும், அங்கு வருபவர்களுக்கு அருள் பொழிந்தும் வருகிறார்கள். அன்னையின் திருவுருவ சிலைக்கு கீழே இருக்கின்ற பீடத்தில் அமைந்துள்ள மந்திரப்பாவை எந்திரம், மிக சக்தி வாய்ந்தது , மற்றும், தேரைய பெருமானால் தோற்றுவித்த அசலை போன்றே நிறுவப் பட்டு இருக்கிறது. மேலும், வரும் பக்தர்கள் அதை பார்த்து வேண்டுதல்களை கூறும் வண்ணம் வெளியிலேயே அமைந்துள்ளது.
சர்வ வல்லமை படைத்த சித்தர்களுக்கு காப்பு சக்தி எதற்கு? இந்த காப்பு சக்தியை, மந்திரப்பாவையாக முதலில் நிறுவியவர் யார்? இவரை எப்படி வழிபட வேண்டும்? வாங்க, அந்த கதையை கேட்கலாம். இந்த பதிவை 4 பாகங்களாக பிரித்துள்ளோம், இது முதல் பாகம்.
(பல நூற்றண்டுகளுக்கு முன்பு, வெளிர்-நீல வானத்தின் கீழ், பச்சை அலைகளைப்போல் தோற்றம் அளிக்கும் அடர்ந்த வனப்பகுதி ஒன்றின் நடுவிற்கு நாம் பயணிக்க போகிறோம். அங்கு மனதை மயக்கும் சுகந்த-மலர்களும், அவற்றில் கண்களை பறிக்கும் வண்ணத்து பூச்சிகளும், இனிமையான பறவைகளின் கீச்சொலிகளும் நம்மை வரவேற்கின்றன. அந்த இடம் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள களக்காடு எனும் எழில் மிகு வனம் ஆகும்.)
பல நூற்றண்டுகளுக்கு முன்பு ஒரு ஆவணி மாதம் சித்திரை நாளன்று, இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள களக்காடு வனபகுதியில் வாடிய முகத்தோடும், விஷ பூச்சிகளின் தாக்குதல்களாலான காயத்தோடும், அழுகண்ணர் சித்தரின் சீடர்கள் அவரை நோக்கி வந்தனர். சீடர்கள் குருவை நோக்கி
“இந்த வனப்பகுதியில் இருக்கும் விஷ வண்டுகளின் கடியினால் ஏற்படும் விஷத்தை முறிக்கும் செந்தூர மருந்தை தயாரிப்பதில் கடுமையான பின்னடைவும், மருந்துகளின் முறிவும், அடிக்கடி ஏற்படுகிறது. அதே வேளையில் நாங்கள் வாசியோகம் பயிலும் நேரத்தில் , ஏதோ ஒருவித வண்டுகளின் ரீங்காரம் எங்கள் சிந்தையை சிதறடிக்க செய்கிறது. இதனால் மனம் ஒருமுகப் படவில்லை. மேலும் அடுத்த மழைக் காலத்தில் வரும் மழையின் அளவும், ஆற்றின் வேகமும் மிகவும் கூட இருப்பதால், வனத்திற்கும், விலங்குகளுக்கும் , மக்களுக்கும் ,யாதொரு பாதிப்பும் ஏற்படா வண்ணம் காக்க வேண்டி, வன தேவதைக்கு அளிக்கும் வேள்வியின் ஆகுதிகளும் , வழிபாடுகளும் தடைபட்டுப் போகின்றன. காரணத்தை எங்களால் யூகிக்கக் கூட முடியவில்லை.” என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.
மேலும், “கடந்த ஒரு வருட காலமாக இத்தகு தடுமாற்றங்களால் பயிற்சிகளும், செந்தூர மருந்து தயாரிப்புகளும் வீணாகின்றன என்று அழுகண்ண சித்தரிடம் முறையிட்டனர்.”
அழுகண்ண சித்தர் “இதைப்பற்றி, பிறகு தெரிந்து கொள்ளலாம்” என்று கூறி, சித்தர்களை பயிற்சி மேற்கொள்ளும் படி அனுப்பி வைத்தார்.
அன்றைய இரவு , அழுகண்ண சித்தருக்கு, இந்த நிகழ்வுகள் எல்லாம் ஏதோ வேண்டும் என்றே செய்யப்படுவது போன்ற உணர்வு வந்தது. எனவே இதைப்பற்றி தெளிவாக அறிந்து கொள்ள விரும்பினார்.
பிறகு அன்றைய இரவே, நடு சாமத்தில் பழனி மலையில் தங்கியிருந்த காளாங்கிநாதர் சித்தரை அணுகி விவரங்களை அறிய, ககன மார்க்கமாக பழனி மலையை அடைந்தார். தம்முடைய பிரச்சினைகள் அனைத்தையும் காளாங்கிநாதரிடம் விரிவாக எடுத்துரைத்தார். இதைக்கேட்ட காளாங்கிநாதரும்
“இது இயல்பான ஒன்றுதான். யாரொருவர் நல்ல காரியங்கள் செய்ய நினைத்தாலும், தேவதைகளின் அருள் பெற மனம் ஒன்றி வழிபாடு செய்தாலும், உண்மையான ஞானத்தை தேட முயன்றாலும், இதற்கு நேர் எதிரிடையான, எதிர்மறை-தீய சக்திகள், முழு வீச்சில் அதனைக் கெடுக்கவும், தடுக்கவும் முயற்சிக்கும்.” என்றார்.
மேலும் காளாங்கிநாதர், அழுகண்ணரிடம் “இந்த உலகம் நன்மை தீமைகளால் ஆனது அல்லவா? இருளும் ஒளியும் வேறு படுத்த முடியாது அல்லவா? உண்மையும் பொய்யும் கலந்தது அல்லவா? அதுபோலத்தான் ஞானமும் மாயையும். சில காலங்கள் ஞானம் மேலோங்கலாம், அதனை சமன் செய்ய மாயை அழுத்தம் கொடுக்கும். அதேப்போல், மாயை ஓங்கும் காலத்தில், ஞானம் கதிர்விட்டு பிரகாசிக்கத் தொடங்கும்.” என்று கூறினார்.
ஞானம்-மாயை பற்றி மேலும் விளக்குகையில், காளாங்கிநாதர் “உனக்குரிய பாதை எது என்று தீர்மானித்து அதன் வழி செல்லும் பொழுது, அது ஞானமான, உண்மையான பாதையாக இருந்தால், இறை-ஒளி உனக்கு வழிகாட்டிக் கொண்டே செல்லும். மாயையின் வழி சென்றால், உனக்கு மகிழ்ச்சியையும் ஆணவத்தையும் கொடுத்து, தன் பாதையில் இழுத்து சென்று, மீளா நரகத் துயரில் ஆழ்த்திவிடும். குறிப்பாக பார்த்தால், மாயை என்பது இனிப்பு தடவிய நஞ்சு ஆகும்.” என்றார்.
இதைக்கேட்ட அழுகண்ணர் “ஞான பாதையில், வேறு என்னென்ன தடைகளை எதிர்நோக்கலாம்? இதை எல்லாம் எப்படி சரி செய்வது?” என்று காளாங்கிநாதரிடம் வினா எழுப்பினார். அதற்கு பதில் அளிக்கையில், காளாங்கிநாதர்
”இந்த மாய உணர்வுகள் நமக்குள் ஏற்படுவதால் தான், நாம் உயரிய நோக்கத்துடன், உலக மக்களின் நலனுக்காக மேற்கொள்ளும் முயற்சிகளும், ஞானத்தை அடையும் முயற்சிகளும், நம் மனதில் ஒருவித வறட்சியை, விரக்தியை, மற்றும் சலிப்பை உருவாக்குகிறது. எல்லா பொதுநல நோக்கர்களுக்கும் இது இயற்கையானது தான். ஆனால் இறையருளை வேண்டி செய்யப் படும் வேள்விகளும், யோக பயிற்சிகளும், தடுமாற்றம் காண்கின்ற பொழுது, உண்மைக்கு பெரும் தீங்கு ஏற்பட்டு விடும். இந்த பயிற்சிகளை தடுப்பது, மாயை மட்டும் அல்ல. மாயை நம் மனதில் தோன்றும் தடுமாற்றம் தான். அதை மனதின் வலிமையைக்கொண்டு வென்று விடலாம். ஆனால் ஞானப் பாதையில் ஏற்படும் இடையூறுகள், மிகுந்த அரக்க சக்தியால் உருவாக்கப் படுபவை. ஒளிக்கு இருள் என்பது போல, இறை ஞானத்துக்கு இது எதிரான அரக்க சக்தி. இதனை எதனைக் கொண்டும் வெல்ல முடியாது. இறைவனுக்கு அருள் ஆற்றல் உள்ளது போல, இதற்கு தீய மந்திர ஆற்றல்கள் உண்டு. இந்த தீய மந்திர ஆற்றல்களை ஞானத்தின் ஒளியை கொண்டே அகற்ற முடியும். ஆகவே உங்களுடைய கூற்றுப்படி பார்த்தால், இது மாயையின் ஆட்டமல்ல, இது, இருளின் அரக்க சக்தியாக தென்படுகிறது. இதனை எதிர்ப்பது, வெற்றி கொள்ளுவது எளிதான காரியமும் அல்ல.” என்றார்.
இதை கேட்ட அழுகண்ணர், மிகுந்த கவலையுடன், “ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள்?” என்று கேட்க, காளாங்கிநாதர்,
“ஆம், அது எளிதான ஒன்று இல்லை, நாம் இந்த அரக்க சக்தியை எதிர்க்க தற்காலிகமான பரிகாரம் காணக் கூடாது, ஏனென்றால், கடந்த வருடம் நான் வெள்ளையம்கிரி மலைக்கு சென்றிருந்த பொழுது, அங்கு இருந்த, சடைதேவர் சித்தரின் குழுக்கள் ஓங்கார நாதத்தை உச்சரித்து , மக்களிடையே ஆன்மீக உணர்வை பெருக்க வேண்டி, வேள்வி செய்து கொண்டு இருந்தனர். அங்கும் நீங்கள் கூறியது போன்றே, அந்த வேள்விக்கு இடையூறாக பல பிரச்சனைகள் ஏற்பட்டு வந்ததாக என்னிடம் கூறினர். இதனால் மக்களிடையே இறை உணர்வும், நல்ல சிந்தனைகளும் உருவாக்க இயலவில்லை என்று வருந்தினர். ஆதலால், இதுபோன்ற பல குழுக்களுக்கும், அவர்கள் செய்ய கூடிய நல்ல முயற்சிகளுக்கும், இந்த அரக்க சக்தி எப்பொழுதும் எதிர் வினையாக்கிக் கொண்டே இருக்கின்றது என்று தெரிகிறது. நாம் வாழும் இடத்திற்கு ஒரு பாதுகாப்பு அரண் அமைத்து கொண்டு எந்த அச்சமும் இன்றி வாழ்வதைப் போல, ஆற்றல் மிக்க ஞானத்தின் ஒளியை நமக்கு உற்ற துணையாக, தகுந்த பாதுகாப்பு அரணாக வைத்துகொண்டு, பயிற்சிகளை செய்தால்; நமக்கு இடையூறு செய்ய வரும், இருள் அரக்கனை இந்த ஞான சக்தி அழித்து, நம்முடைய நோக்கங்கள் நிறைவேற உதவி செய்யும்.”
அழுகண்ணரும், “அருமை-அருமை, இதை எப்படி சாத்தியப்படுத்துவது?” என்று கேட்க, காளாங்கிநாதர்
“இந்த வழிதான் எனக்கு புலப்படுகிறதே தவிர, இதனை எவ்வாறு சாத்தியம் ஆக்குவது என்று எனக்கு விளங்கவில்லை. வேண்டும் என்றால், நாம் இதற்கெல்லாம் விடிவு காணக் கூடிய, சிவனின் சீரிய பக்தனாகிய, அகத்திய முனிவரை அணுகி ஆலோசனை பெறலாம்” எனச் சொன்னார்.
இதைகேட்ட அழுகண்ணரும், “வாருங்கள் இப்பொழுதே பொதிகை மலை போகலாம்” எனக் கூற, காளாங்கிநாதர்
“சற்று பொருங்கள், இப்போது அகத்திய சித்தரிடம் விளக்கம் கேட்க வாய்ப்பு இல்லை. காரணம் அவர் தற்பொழுது, விந்திய மலையில் கோரக்கர் சித்தரோடு வாதம் செய்ய சென்றிருக்கிறார்.” என்று கூறினார்.
நமது கோரக்க சித்தர் அவர்கள், மானிடர்கள் அனைவரும் சமத்துவ வாழ்வு வாழ வேண்டி, யாவற்றையும் தங்கமாக்கி, அதனை மாந்தர்களுக்கு கொடுக்க முயற்சிக்கிறார். இது தவறான செயலாகும். இதனால் உழைப்புக்கு மதிப்பு இருக்காது. முயற்சிகள் யாவும் வற்றிப் போகும். கர்ம வினைகள் அனைத்தும் தடுமாற்றம் அடையும். சிவனாரின் அனுமதி இன்றி, இச்செயலை செய்யக் கூடாது என்று கோரக்கர் சித்தருக்கு விளக்கம் சொல்ல, விந்திய மலைக்கு அகத்தியர் சென்றிருப்பதாக காளாங்கிநாதர், அழுகண்ணரின் கேள்விக்கு விடை அளித்தார். ஆகவே, கார்த்திகை மாதத்தில், சிவபெருமான் ஞான ஒளியாய் பிரகாசிக்கும் நாளன்று, பொதிகைமலைக்குச் சென்று, அகத்திய முனிவரைக் கண்டு, அனைத்தையும் முறையிடலாம் என கலந்து முடிவெடுத்தனர்.
பிறகு அந்நாளும் வந்தது.
அழுகண்ண சித்தருடன் காளாங்கிநாதரும், அவர்களுடன் சுமார் 30 சீடர்களும் பயணம் புரிந்து அகத்தியர் மலையை அடைந்தனர். அகத்தியர் பெருமானும், அனைவரையும் நன்கு வரவேற்று, உபசரித்து வருகையின் நோக்கத்தை தெரிவிக்கக் கேட்டார். காளாங்கிநாதரும் எல்லா நிகழ்வுகளையும் எடுத்துக் கூறி, எங்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும் ஒரு சக்தியை தாங்கள்தான் தந்தருள வேண்டும் என்று முறையிட்டார்.
இதைக்கேட்ட அகத்தியர், சிறிது நேரம் யோசித்து விட்டு, “வேண்டுமென்றால் உங்களுக்கு ஒரு உபாயத்தை சொல்கிறேன்” என்றார். “தற்சமயம் கடணாநதி ஓரமுள்ள, அத்திரி மலையில், குடிலமைத்து தம் சீடர்களுடன் தங்கி இருக்கும் தேரையரை அணுகி, அவரிடம் நடந்த விவரங்களை விளக்கி, நான் உதவி செய்ய சொன்னதாக அவனிடம் தெரிவியுங்கள். அவன் நிச்சயமாக உதவி செய்வான்.” என்று சொல்லி வழி அனுப்பி வைத்தார். அவர்களும் நேராக தேரையர் சித்தரை அணுகி, வணங்கி தம்முடைய பயணத்தின் நோக்கத்தை தெரிவித்தனர்.
அனைத்தையும் முழுமையாகக் கேட்ட தேரையர் சித்தர், “சரி, நான் கண்டிப்பாக உதவி செய்கிறேன். இது சம்பந்தமாக நான் இறைவனை தியானித்து, அதன் பின்னர் வழிமுறைகளை அறிந்து, அதன் படி நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து, உங்களுக்கு தெரியப் படுத்துகிறேன். பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று என்னை வந்து பாருங்கள்.” என்று சொல்லி வழி அனுப்பி வைத்தார்.
மறுநாள் காலை தேரையர், சூரிய உதயத்திற்கு முன்பு, நித்திரைக் கலைத்து, நதிக்கு சென்று நீராடி, சூரியன் உதிக்கும் போது, எனக்கு ஆன்ம ஒளி ஞானம் தந்தருள வேண்டும் என்று சூரிய பகவானை வணங்கி வேண்டினார். பின்னர் சிவ நாதத்துடன் தனது ஆன்மாவை இணைத்து, யோகம் புரியலானார். அந்த ஞான ஒளி அதிர்வுகள் அவருக்கு எல்லா வழிமுறைகளையும், விளக்கங்களையும், உணர்வுகளாக விளக்கத் தொடங்கியது.
அதன்படி தேரையர் சித்தர், தமது 12 சீடர்களையும் அழைத்து, அவர்களுடைய காதுகளில் அவர்களுக்கு உரிய மந்திர உபதேசங்களை செய்தார். அந்த சீடர்களை சக்கர வடிவத்தில் உள்ள ஒவ்வொரு கோணமாக பார்த்து அமரச் செய்தார். தம்முடைய முழு மன வலிமையோடு தாம் உபதேசித்த மந்திரங்களை உச்சாடனம் செய்யும் படி உத்தரவிட்டார். தேரையர் சித்தரும் தம்முடைய மன ஆற்றலால் மந்திர உச்சாடனம் செய்யும் காலத்தில், அம் மந்திரங்களை முறையாக ஒருங்கிணைத்தார். இவ்வாறு, நாளொன்றுக்கு 18 மணி நேரம் தொடர்ந்து மந்திர உச்சாடனம் செய்து வந்தார். சரியாக 48 நாட்கள் முடிந்தது.
சரியாக 48 நாட்கள் முடிந்த பின்னர், இம்மந்திர சக்திகளை, அதன் அதிர்வுகளை, தேரையர் சித்தர், அதற்குரிய கோணங்களை வடிவமைத்து அதற்குரிய ஆதார மந்திர ஆற்றலை மையத்தில் அமைத்து, முழுமையான பாதுகாப்பு எந்திரத்தை அமைத்தார். அதற்கு உரிய தேவதைக்கு உருவமும் கொடுத்தார்.
தேரையர் சித்தர் ஏற்கனவே கூறியபடி பங்குனி மாதம் பௌர்ணமி நன்நாளும் வந்தது. அழுகண்ண சித்தருடன் காளாங்கிநாதரும் தேரையரை சந்திக்க சென்றனர்.
தேரையரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று, தான் இதுவரையிலும் என்னென்ன செய்தோம் என்ற எல்லா விவரங்களையும் காளாங்கிநாதருக்கும் அழுகண்ண சித்தருக்கும் தெளிவாக விளக்கினார்.
மேற்கொண்டு என்னென்ன செய்ய வேண்டும் என்பதனையும் இரு சித்த புருஷர்களுக்கும் விரிவாக தெரிவித்து, தான் அமைத்த எந்திரத்தை காளாங்கிநாதரிடம் ஒப்படைத்தார்.
பிறகு காளாங்கிநாதரும் அழுகண்ண சித்தரும் மிக பாதுகாப்புடன், சதுரகிரி மலையில் சித்தர்கள் யாகம் புரியும் இடத்திற்கு அந்த எந்திரத்தை எடுத்து வந்தனர்.
பின்பு ஒரு நல்ல நாள் பார்த்து, அந்த பகுதியில் உள்ள சந்தனமரத்து மலையில் இருக்கும் ஆகாயகங்கை தீர்த்தத்தை எடுத்து வந்து, கலசத்தில் நிரப்பி, அதை பூரண கலசமாக, முறையோடு, அழகாக அமைத்தனர். அதன் பின், முறையாக விநாயகர் பெருமானையும், சிவனாரையும், சக்தியையும் வழிபட்டு, தேரையர் சித்தர் வடிவமைத்த எந்திரத்தின் மேல் கலசத்தை காப்பு சக்தியாக பாவித்து, வேள்வி மந்திரங்களைச் சொல்லி அந்த சக்திக்கு அமானுஷ்ய (அருவ, உருவ) உரு கொடுத்தனர்.
இந்த வேள்வியானது பங்குனி மாதம், ரேவதி நட்சத்திரம் தொடங்கி, சித்திரை மாதம், பூசம் நட்சத்திரம் வரை நடைப்பெற்றது. சித்திரை மாதம் பூசம் நட்சத்திரத்தில் அமானுஷ்ய உருவத்தில், அழகிய தோற்றத்துடன், எந்த அரக்க சக்தியாலும் வெற்றி கொள்ள முடியாத முழு ஆற்றலுடன் தோன்றி காட்சியளித்தார். அங்கு வேள்வி புரிந்த சித்தர்களும் சீடர்களும் பெரும் ஆனந்தத்தில், கண்ணில் நீர் மல்க அவர் பொற்பாதம் தொழுது பணிந்தனர். எந்நாளும் எங்கள் பக்கம் இருந்து எங்களுக்கு துணை நின்று காத்தருள வேண்டும் தாயே, என வேண்டிக் கொண்டனர்.
அந்த பாவையும், மனம் மகிழ்ந்து, என்னை மானசீகமாக வழிபட்டு தொடங்கும் நல்லோரின் செயல்களுக்கு எந்தவித இடையூறுகளும், துன்பங்களும் ஏற்படா வண்ணம், பாதுகாப்பு அரணாக இருந்து, அவர்கள் முயற்சியில் முழு வெற்றி அடைய செய்வேன் என்று வரம் கொடுத்தாள்.
அந்த சக்தியை போற்றி பாடிவிட்டு, முறைப்படி வேள்விகளை பூர்த்தி செய்து விட்டு, அந்த மனோசக்தி எந்திரத்தை அகத்தியர் பெருமானிடம் கொண்டு சென்றனர் அழுகண்ண சித்தரும் காளாங்கிநாதர் பெருமானும்.
அகத்தியர் பெருமானும், அந்த மகத்தான எந்திரத்தை வாங்கி பார்த்து விட்டு, ”உண்மையிலேயே இது தேரையர் சித்தரின் மனோ சக்தியால் உருவாக்கப்பட்ட அற்புதமான பாவை சக்தி” என்றும், “சித்தர்கள் வழிபாடு செய்யும் இடத்தில் இவர் முதன்மையாக இருந்து, எந்த அசுர சக்தியாலும், எவ்வித கெடுதலும் ஏற்படா வண்ணம், சித்தர்களுக்கு துணை புரிவார்” என்றும் அருளினார்.
“இந்த எந்திரத்தை எதிர் காலத்தில், சித்தர்கள் பெறும் பொருட்டு, நானே வைத்துக் கொள்ளுகிறேன்” என்றும் கூறினார். பின்னர் மகத்தான அகத்திய பெருமானும், மந்திரபாவை அன்னையை மனமுருகி பூஜை செய்தார். இதை வாத சௌமியம் எனும் நூலில் மந்திர வாள் தியானம் எனும் தலைப்பில் எழுதியுள்ளார்.
பாடல் 439
“முன்னான கண்மணியே ரூபாரூபி
முதலான பூரணமே அருமைக் கண்ணே
ஒண்ணான பூரணமா
யென்னாளுந்தான்
ஓமென்ற மூலமந்திர சத்திமாதே”

பாடல் 440
“முக்தியுள்ள மோனமந்திர விவேகத்தாயே
மோனமுடன் தியானமதாய்ப் பூசைசெய்யே
பக்தியுள்ள மந்திரவாள் கையிலீந்து
பதிவான வரங்கொடுப்பான் கெதியைப்பாரே”

மற்றும் மந்திரவாள்—-மந்திர ரூபி எனும் தலைப்பில்
பாடல் 460
“தோணுகின்ற வாலையடா மந்திரரூபி
சுயர் ஜோதியான ஜெக ஜோதிதன்னை
பூணுகின்ற சித்தமதாய் தானே நின்று
பூரணமாய்க் கேசரியைப் பூசைபண்ணே”

இதேபோல் மந்திரபாவையைப் பற்றி தோத்திரம் எனும் தலைப்பில் போற்றி பாடியுள்ளார்.

பாடல் 348

“காரணமே கண் நிறைந்த கமலத் தாயே
கமலரச பூரணமதாய் நின்ற மாதே
பூரணமாய் சகல சித்தும் தானே தானானாய்
மகாமந்திர சொரூபமதாய் நின்றதாயே”

இந்த எந்திரம் பிற்காலத்தில், உரிய முறையில் பயன்படுத்த நினைப்பவர்கள் கண்களுக்கு மட்டும் புலப்படும். மற்றவர்கள் கண்களுக்கு இது கல் போல் தோன்றும் என்று கூறி அந்த எந்திரத்தை தம் இருப்பிடத்தில் வைத்துக் கொண்டார்.

இன்றும் அகத்தியர் மலை சென்று, முறையாக விரதம் இருந்து, வழிபாடுகள் செய்து, தென்கிழக்கு திசை மூலையைப் பார்த்து தியானித்தால், அந்த புனித எந்திரம் ஒரு கல்லில் காட்சியாக வெளிப்படும். அதை மனதினில் பதித்து, அந்த எந்திரத்தை வடிவமைத்துக் கொள்ளலாம்.

கோரக்கர் சித்தர் எழுதிய சந்திரரேகை நமன் ஆசன திறவுகோல் நூல் 100

பாடல்கள் 12 , 13
“வைத்ததொரு நூல்தன்னில் வெளியாய் எல்லாம்
ஓதி வைத்தோம் புவிமது சந்தேகம் தீர
மெய்தவநூல் மேதினியில் அறியாவண்ணம்
மறைவாக அகத்தியரும் மறைத்ததாலே”

“என்றுஏகி சாபமிட்டபோதே நூலும்
இழிவாக பாறையைப்போல் திரண்டது அங்கே
நன்றாக பாறையிடம் சென்றோர்க்கு எல்லாம்
நகருமது தெளிவாக நூலும் தோன்றும்”

பல்லாண்டுகள் கடந்தன.
சித்தர்களின் ஆளுமைக்கு இவ்வுலகம் வரத் தொடங்கியது. வேதாகம விதிகளின் வீரியம் தணிந்தது. இங்கு தமிழ் வழி வழிபாடுகளும், ஜாதிகுல பேதங்களும் மறைந்து, மகத்தான சித்தர்கள் ஆட்சி வரத் தொடங்கியது. தமிழ்வழி சித்தாகம வேள்விகள், வழிபாடுகள், போற்றிகள் சற்று முன்னுக்கு வர தொடங்கியது.

ஆகவே, இவ்வுலகில் சித்தர்கள் அருவ குழுக்களாக பலப்பல பணிகளை எடுத்து செய்ய தொடங்கினார்கள். இந்த உலகத்திற்கு அச்சாணி போன்ற, உண்மையான, ஞான நாத தத்துவங்களை, மீண்டும் பெரிய ஆற்றலுடன் வளர்க்க தொடங்கி விட்டனர்.

இதன் வெளிப்பாடாக,

இந்த எந்திரத்தை பெறும் முறையையும் குறிப்பிட்டு, அதன்படி கடுமையாக முயன்று, அந்த எந்திரத்தை பெற்று வந்து, அந்த அருவ சக்திக்குரிய தோற்றங்கள், அஸ்தங்கள், ஆயுதங்கள், யாவும் உருவகப்படுத்தி, அந்த எந்திரமும் வெளிப்பார்வைக்கு தோன்றும் வண்ணம் பீடம் அமைத்து, அந்த உருவ சக்தியை ஸ்தாபனம் செய்து, நமது பள்ளிக்கரணை எனும் திருத்தலத்தில் அமைந்திருக்கும் ஆதிபராசக்தி ஆலயத்தில் மந்திரபாவை எனும் பெயரில் வழிபட்டு வருகிறோம்.

இவர் முன்னர் 18 சித்தர் குழு தலைவர்களான,
அகத்தியர்
கருவூரார்
தேரையர்
இடைக்காடர்
அழுகண்ணர்
சட்டைமுனிநாதர்
புலஸ்தியர்
போகர்
காளாங்கிநாதர்
சிவவாக்கியர்
மச்சமுனி
புலிப்பாணி
திருமூலர்
கொங்கணவர்
இராமதேவர்
பாம்பாட்டி சித்தர்
பிண்ணாக்கீசர் மற்றும்
கமலமுனிநாதரும் யோக நிலையில் இருந்து ,

இனி, வருங்காலத்தில், உலகத்தில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் நல்லதாக அமைய வேண்டும் என்பதற்காக யோக நிலையில் அமர்ந்துள்ளனர்.

வேறெங்கும் அமைந்திராத இந்த எந்திரத்தையும், பாவையையும் தரிசிப்பதன் மூலம் உங்கள் அனைவரின் வாழ்விலும் ஏற்படும் பல நல்ல மாற்றங்களை நீங்களே உணரலாம். பொதுவாக ஆலயங்களில் மந்திர சக்கரத்தை சுவாமி சிலைக்கு அடிபுறத்தில் மறைத்து வைக்கப்படும், ஆனால் நமது மந்திரப்பாவை அன்னையின் கருவறையில், இந்த எந்திர சக்கரம் பக்தர்களின் பார்வைக்கு புலப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் பக்தர்களின் மேல் அந்த சக்கரத்தின் மந்திர அதிர்வுகள் பட, அவர்களின் அனைத்து துன்பங்களும், தொல்லைகளும் நீங்கி, சுக வாழ்வு வாழக்காண்பார்கள். அனைவரும் தனது வாழ்நாளில் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய ஆலயம் இது.

நமது ஆலயத்தில் மந்திரப்பாவை அன்னைக்கு தினசரி காலையில் அபிஷேகம் நடந்தாலும், செவ்வாய், வெள்ளி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், இராகு காலங்களில் நடக்கும் அபிஷேகம் மிக சிறப்பு வாய்ந்தவையாக பக்தர்கள் கருதுகின்றனர்.

அதேபோல் சனிக்கிழமை மந்திரப்பாவைக்கு சந்தனக்காப்பு செய்து அந்த சந்தனத்தை வீட்டில் வைத்து வணங்குவது, பக்தர்கள் தங்களுக்கு அன்னை அளித்த கவசமாக உணருகிறார்கள்.

இத்தனையையும், பக்தர்களாகிய நாம் அனைவரும் நல் வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த பொக்கிஷங்கள்.

18 சித்தர்கள்

வரவிருக்கும் நிகழ்வுகள்

Ankila varudappirappu

ஜனவரி 1, 2026

Ankila varudappirappu

ஜனவரி 1, 2027

Subscribe To Newsletter

* indicates required

இதர மந்திரப்பாவை காணொலிகள்

News Archives

    வரவிருக்கும் நிகழ்வுகள்

    Ankila varudappirappu

    ஜனவரி 1, 2026

    Ankila varudappirappu

    ஜனவரி 1, 2027