சித்தர்கள்

சித்தர்கள்2020-03-05T11:45:36+00:00

சித்தர்கள்

இந்த மஹா சித்த புருஷர்கள் அனைவரும் சாதாரணமாக நம்மை போலவே மண்ணில் மானிடர்களாக தோன்றியவர்களே.
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு இலக்கினை வைத்துக் கொள்கிறார்கள். அதனை நோக்கியே பயணிக்கிறர்கள்.

சாதாரணமான மக்கள் குடும்ப வாழ்வு போதுமானது என்று தொழில் செய்து பொருள் ஈட்டி, குடும்பத்தில் மனனவி மக்கள் சுற்றம் என்று வாழ்ந்து மடிந்தார்கள்.

இவர்களைப் பற்றி உலகில் அறிந்தவர்கள் யாருமே இல்லை. மக்களில் பெரும்பான்மை ஆனவர்கள் இந்த நிலையை சார்ந்தவர்களாகவே வாழ்ந்து உள்ளனர்

“தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலில் தோன்றாமை நன்று”.என்று வள்ளுவர் பெருந்தகையார் குறளில் பாடியுள்ளார். இதற்கு ஏற்ப மக்களில் சிலர், ஏதாவது சாதனை செய்து புகழோடு வாழ வேண்டும் எனறு எண்ணுகிறார்கள்

இப்படிப்பட்டவர்கள் ஏதேனும் ஒரு கலையில் அல்லது துறையில் தேர்ச்சிப் பெற்று தனிப்பட்ட சாதனை செய்து புகழோடு வாழ விரும்புகிறார்கள்.(உதாரணத்திற்கு நடனம், இசை, கல்வி,விஞ்ஞானம் விளையாட்டு போன்றவை)

இந்த சாதனைகள் அனைத்தும், உடல் சார்ந்த செயல்களாக, மனதின் ஆற்றலைக் கொண்டு உடலை வலுப்படுத்தி அதன் பொருட்டு செய்யப்படும் சாதனைகள் ஆகும்

மனதின் ஆற்றலைக் கொண்டு உடலை செயல்படுபவர்கள் மனிதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் மனதிற்கும் இதற்கும் கீழே நுட்பமான ஆற்றல் உண்டு.

இது ஆன்மாவிற்கு மேலாகவும்,மனதிற்கு கீழாகவும் உள்ள ஆற்றல் சித்தம் எனப்படுகிறது.

இந்த சித்தத்தின் ஆற்றலைக் கொண்டு ஆன்மாவின் இயற்கை ஆற்றலோடு கலந்து புலன்கள் வழியில்லாமல் செயல்படக்கூடியவர்கள் சித்தர்கள் எனப்படுகிறார்கள்.

இதற்கும் கீழே உள்ள ஆற்றலே ஆன்ம ஆற்றல். இதுவே ஒவ்வொரு உயிருக்கும் அடிப்படை ஆதார சக்தியாக விளங்குகிறது.

சித்தமும் மனமும் இந்த ஆற்றலின் மூலமே செயல்படுகிறது. இந்த ஆன்மாவின் ஆற்றலைப் பற்றித் தான் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தமது கீதையில் இதனை வாளினால் வெட்ட முடியாது,
நீரினால் நனைக்க முடியாது,
நெருப்பினால் எரிக்க முடியாது
காற்றினால் உலர்த்தமுடியாது.
அழிவில்லாதது, என்றும் நிரந்தரமானது- என கூறுகிறார்.

செயலாற்ற முடியாத நிலையில் உள்ள உடலை கிழிந்த சட்டை போல் உதறிவிட்டு அந்த உடலில் உள்ள கர்ம வினைகளை அதிர்வுகளாக சுமந்து கொண்டு, புது உடலை புது சட்டையாக அணிந்து கொண்டு தம்முடைய கர்ம வினைகளோடு பயணங்களை தொடங்குகின்றது என்கிறார்.

அதனால்தான் மறுபடி இந்த ஆன்மா மீண்டும் பிறக்கும் என்று ஆன்மாவை பற்றி சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பே உபதேசித்துள்ளார்.

(2000 வருடங்களுக்கு முன்புதான் ஆன்மவியல் இந்தியாவிற்கு வந்தது என்று தவறாக எடுத்துரைப்பவரை கவனியுங்கள்)

பிற்காலத்தில் நம்மிடமிருந்து எடுத்துக் கொண்ட ஆன்மா என்ற சொல்லை பயன்படுத்கிறார்கள். இந்த ஆன்மாவின் விளக்கங்கள் கூட இவர்களுக்கு தெரியாது உண்மையை அறிவோம்.

இந்த ஆன்மாவை “ஜீவன்” என்றும் “சிவன்” என்றும் சொல்வார்கள்.

இந்த ஆற்றலோடு இணைந்து வாழக் கூடியவர்கள் சித்தர்கள்.

சித்தர் நிலையை எப்படி பெறுகிறார்கள் ?

சித்துக்கள் புரிபவர்கள் எல்லாம் சித்தர்கள்.
இவர்கள் பிரபஞ்ஜத்தில் இருக்கும் ஆற்றலை, உடலில் இயற்கையாக உள்ள குண்டலினி சக்தி எனும் ஆதாரசக்தி ஆற்றலுடன் தனதுடைய பிரணாயாம பயிற்சியினால் மேலும் மேலும் கூட்டி அந்த சக்தியை விரிவடையச் செய்து ஆறு ஆதாரங்களிலும் நிரப்பி முழு ஆற்றலோடு ஞானத்தை அடைகிறார்கள் .

இப்படி மனதை ஒருமுகப்படுத்தி, பர ஆற்றலோடு ஒன்றோடு கலந்து, உடலில் ஆதார ஆற்றலையும் பர வெளி ஆற்றலையும் ஒன்றாக நிறுத்தி வாழ்பவனே ஜுவன் முக்தன் ஆவான்.

அதாவது இவர்கள் உயிரோடு முக்தி நிலையை எய்தியவர்கள் என்று பொருள்.

(இதைப் பற்றி தெளிவான , துல்லியமான ஆற்றல் விதிகள் புற இனத்தர்களிடையே இருப்பதாக இதுவரையிலும் தெரியவில்லை.)

இனி சித்தர்களுக்கு வருவேம் :-

முதலில் தனக்கு தகுந்த குருவை தேர்ந்தெடுத்து, மன உறுதியோடு முறையாக யோக பயிற்சிகள் மேற்கொண்டு உடலை சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

சித்தர்கள் இதில் இரண்டு வகை சுத்தி செய்து கொள்வார்கள்.

1, கற்ப மூலிகை மருந்துகள் உட்கொள்ளுதல்

2, பிரணாயாம பயிற்சியில் பிராண அதிர்வுகளை குறிப்பிட்ட ஏற்ற இறக்கங்களோடு
செய்தும் , நாடி
ஓட்டங்களை

சுத்தப்படுத்தி உடலை சுத்திப் படுத்திக்கொள்வார்கள்.

இனி உடல் சித்தி எனப்படும் காய சித்தி மிக தேவையான அடிப்படையான ஒன்று.

உடலில் நோய்களோ, உடல் தளர்வுகளோ தோன்றினால் மனம் சஙஞ்சலப்படும். இதனால் யோகம் புரியும் நோக்கம் நிறைவேறாது.

இவ்வாறு காய சித்தி அடைந்த பிறகு மனமும் கட்டுக்குள் அடங்கும். பின்பு சித்தத்தின் பால் மனதை செலுத்தி அதனோடு கலந்திருக்க செய்யும் பயிற்சியே வாசி பயிற்ச்சி எனப்படும்.

இது பல சூட்சும முறைகளைக் கொண்டது. இந்த பயிற்சி 2 வகைப்படும்

ஒன்று மூலவர்க்கம் என்றும், மற்றொன்று நந்திவர்க்கம் என்றும் கூறுவர்.

திருமூலர் தம் சீடர்களுக்கு அளித்த பயிற்சி முறை திருமூல வர்க்கம் என்றும். நந்தி தம் சீடர்களுக்கு அளித்த பயிற்சி முறை நந்தி வர்க்கம் என்றும் கூறப்படுகிறது

மூலவர்க்கத்தில் வேதியல் எனப்படும் இரசாயனம் மற்றும் ரசவாதம் முறைகள் கொண்டு சித்தத்தை பயிற்சி செய்வது

நந்தி வர்க்கத்தில் வெளி மந்திர உச்சரிப்புகளால் அதிர்வுகளை உள்வாங்கிச் சித்தத்தில் இணைத்து பயிற்சி செய்வது.

இப்படி சித்தம் இயங்க தொடங்கிய பிறகு அவர் உடலுக்குத் தேவையான எல்லா ஆசைகளும் விருப்பு வெறுப்புகளும், தீய குணங்களும் அவனை விட்டு தானாக விலகத் தொடங்கும்.

அவர்கள் இந்த உடல்களையோ பொருட்களையோ சார்ந்து இயங்க வேண்டும் என்ற நிலை கடந்துவிடும். இந்த சித்தர்கள் தம் சித்த ஆற்றலால் மற்ற மக்கள் உயிரினங்கள் பொருட்கள் அதன் எண்ணங்கள், குணங்கள், தன்மைகள், கலப்பு, பயன்பாடு, யாவற்றையும் உணர்ந்து கொள்வார்கள்.

இதனால்தான் எந்த வித ஆய்வு கூடமும் ஆராய்ச்சியுமின்றி மூலிகைகளின் தன்மைகள்,பயன்படுத்தும் முறைகள், உலோகங்களின் கலப்புகள், அதனை மாற்றி அமைக்கும் வழிமுறைகள், உயரிய பாஷாணங்கள், அதன் நஞ்சை முறித்து அதனை அமிர்தம் ஆக்கும் வழிமுறைகள் எல்லாம் அறிந்து கொள்கிறார்கள்.

இந்த நிலை எய்திய சித்தன், அதாவது காய சித்தி அடைந்த பிறகு இயற்கையின் ஆற்றலுடன் கலந்து, அதனை வசப்படுத்த தெரிந்து கொண்ட பின்பு மூன்றாவது நிலையை அடைகின்றான்.

இந்த நிலையில் விண்ணைப் பற்றிய அறிவு, விண்ணில் நிறைந்துள்ள ஆற்றல், கோளங்கள் அதன் இயக்கங்கள், கோளங்களின் தன்மைகள்,கோளங்களில் வாழும் உயிரினங்கள், இருள், ஒலி உருவாகும் காரணங்கள், கால வரையரைகள் அதன் மூலம் உலகத்தில் எந்தெந்த காலங்களில் என்னென்ன மாற்றங்கள் எநதெந்த இடங்களில் யாரால் நடைபெறும் என்று உணரும் காலம் பற்றிய அறிவு , தம் சித்த ஆற்றலால் காலத்திற்கு முன்னும், பின்னும் கடந்து செல்லும் ஆற்றல் எல்லாம் கைகூடும்.

இவ்வளவு பயிற்சிகளையும் முடித்த பிறகுதான் , அவனை மாணவ சித்தனாகவே தம் குழுவில் குரு சித்தர் ஏற்றுக்கொள்வார்.

இந்த குரு அவன் பயிற்சியின் போது பெற்ற நிறை குறைகளை விளக்கி அவனுக்குத் தெளிவான முழுமையான பயிற்சிகளையும் அளித்து, பிறகு அவன் முழுமையாக தேறிய பின்னர் அவனை ஒரு சித்தனாக ஏற்றுக்கொள்ளுவார்.

ஆனால் இந்த சித்தனை அகத்தியரிடம் அனுப்பி சித்தர்களிடையை அங்கீகாரம் பெறும்படி சொல்லுவார்கள்.

அகத்திய முனிவரும் இந்த சித்தர்களை சோதிக்க உலகத்தில் இல்வாழ்க்கை நடத்திய வண்ணம்

(சித்தர்களை இல்லத்திற்கு ஏகுதல் எனும் தலைப்பில்)

எந்த சக்தியையும் பயன்படுத்தாது ஏதேனும் ஒரு சாதனை புரிய சொல்லுவார்.

சிலரை ஏதேனும் நல்ல உயர்ந்த சேவைகளை இறையுணர்வோடு மக்களுக்கு அளிக்க சொல்லுவார்.

சிலரை தவறான குழுக்களின் வழி காட்டுதலால் மக்கள் அறியாமையில் குழுக்களால் பாதிக்கப்படும் போது அந்த தவறான குழுக்களின் வழிகாட்டுதலில் இருந்து , விலக்கி காப்பாற்றும் படி சொல்லுவார்.

இவ்வாறு இன்னும் பல சோதனைகளையும், இந்த சித்தர்களுக்கு அளித்து அனுப்பி வைப்பார்.

இதில் தம் பங்கை வெற்றிகரமாக நிறைவேற்றிய பின்பு, அவருக்கு அங்கீகாரம் கொடுத்து தமது சித்தர் குழுவில் இணைத்து கொள்வார்.

இப்படி தூய்மையான 100 பங்கு மன சுத்தம், சித்த சுத்தம் அடைந்த பிறகே அவனுக்கு சித்துக்கள் புரியும் ஆற்றலையும் ஆசிர்வாதம் செய்து அங்கீகாரம் கொடுப்பார்கள்.

இந்த சித்துக்கள் தீயோர் கையில் சிக்கினால் உலக மக்களுக்கும், இயற்கைக்கும் சர்வ நாசம் ஏற்படும் என்று கருதியே மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டார்கள்.

இவ்வாறு தேர்ந்தெடுக்ப்பட்ட சித்தர்கள் சர்வ காலம் யோக நிலையிலும், மூலிகை இரசவாதங்கள், மந்திரங்கள், நோய்கள் இவைகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்து கொண்டும், அதில் ஏதேனும் புதுமைகள் செய்து கொண்டும் இருப்பார்கள்.

சிலர் பல ஆன்மீக செயல்களைச் செய்து கொண்டும், மக்களுக்கு போதனைகள் செய்து கொண்டும் இருப்பார்கள்.

இவ்வாறு செய்து கொண்டிருக்கும் போது 12 வருடங்களுக்கு ஒரு முறை சித்தர்களால் அகத்திய பொருமானின் தலைமையில் சித்தர் சபை கூட்டப்படும்.

இந்த சபை ஒரே இடத்தில் கூடாது

ஒவ்வொரு முறையும் மனித நடமாட்டமற்ற மலைகள், சம வெளியான ஆற்றின் பரப்புகள், அடர்ந்த காடுகள், தீவு பகுதிகள் போன்ற இடங்களில் கூடும்.

அப்போது ஒவ்வொரு சித்தரும் தாம் அறிந்தது, செய்தது சாதித்தது (சாதனை), போன்றவற்றை சபை முன்னர் விளக்கி பேசுவார்கள்.

இதில் சிறப்பாக ஆராய்ந்து உலக இயற்கைக்கும், மக்களுக்கும், பயன்படும்படியான வித்தைகள் செய்தவருக்கு குழுத்தலைவர் பட்டமும் கொடுத்து அங்கீகரிப்பார்கள்.

இவர்கள் மூலமே, நாட்டு மக்களுக்கும்,இயற்கைக்கும் அனைத்து நலன்களயும், வளங்களையும் பராமரிக்கும் பொறுப்புகளையும் அளிப்பார்கள்.

இவர்கள் நம்மால் சொல்லப்படும் எண்வகை சித்திகளையும் புரிவார்கள். அதற்கு மேலும் அண்டங்களில் பல சித்துகள் புரிவார்கள்.

இந்த சித்துக்கள் அனைத்தும் பரவெளியில் உள்ள இறை ஒலியின் அருளாலும், (நாதம்) ஆசிர்வாதத்தாலும் செய்வார்கள்.

இப்படிப்பட்ட ஆற்றலை பெற்ற எண்ணற்ற சித்தர்கள் நம் இந்தியாவிலேயே உருவிலும், அருவிலும் உலாவிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சாதாரண ஒரு சித்தனே மனிதர்களுக்கு தோன்றும் பல ஆயிரக்கணக்கான நோய்களையும், தம்முடைய ஆற்றலால், பார்வையால், தொடுதலால், முழுக்க நீக்கி ஆரோக்கியம் தரும் சக்தி பெற்றவராக விளங்குகிறார்.

இதற்கு இறைமகனாகத்தான் பிறந்து வர வேண்டும் என்று அவசியமில்லை.

அவரின் சாதனைகளை விட பல நூறு மடங்கு சாதனைகள் இந்த சித்தர் பெரு மக்களே செய்துள்ளதை நாம் அறிவோம்.

சித்தர்களைப் பற்றி தெரிந்து கொண்டோம். சித்தன் என்பவன் யார்?, அவன் பெற வேண்டிய தகுதிகள், பயிற்ச்சிகள், ஆற்றல்கள், உலக நலன் பொருட்டு செய்ய வேண்டிய பணிகள் அனைத்தையும் மிக சுருக்கமாக அறிந்து கொண்டோம.

முதலில் திருமூலரை பற்றி சிறு குறிப்பு காண்போம்.

திருமூலர் வர்க்கமென்று ஒரு சித்தர் பரம்பரையே திருமூலர் பெயரால் அழைக்கப்படுகிறது.

சித்தர் நெறிக்கு முழுமையான ஆதாரமும், பாட வகுப்பும்,செயல் திட்டமும் , எல்லாம் திருமூலர் அருளிய திருமந்திரம் என்றுதான் கூற வேண்டும்.

சித்தர் அம்சத்தின் நான்கு அம்சங்களான வைத்தியம், வாதம், யோகம், ஞானம் ஆகிய 4 துறைகளைப் பற்றியும் திருமூலர் பிரான் பாடி அருளியுள்ளார்.

ஒரு குழந்தை கருவில் உருவாகும் போதே, அதன் ஆயுள், அமைப்பு, அது அடைய போகும் வாழ்வின் தன்மை யாவும் நிர்ணயிக்க பட்டு விடுகிறது என்கிறார் திருமூலர் பிரான்.

அறம் உணர்ந்த ஆற்றல் மிக்க நெறியும், நேர்மையும் கொண்டு ஒழுக்கமான ஒரு மனித சமுதாயத்தை உருவாக்கும அறிவுச்சுடர் இந்தியாவில் மட்டும்தான் தூண்டா விளக்காக இன்றும் சுடர் விட்டு கொண்டிருக்கின்றது.

இந்த விளக்கு மேலும் மேலும் கண்டிப்பாக பிரகாசம் அடையும்.
சூரிய ஒளியின் வழிகாட்டுதலில் நடை போடும் போது நமக்கு
பிறர் புற தேசத்தில் இருந்து கொண்டு வரப்படும் கைவிளக்கு நமக்குத் தேவையா?.
சிந்தியுங்கள்

அதே போல் இலட்சம் மடங்கு பிரகாசம் எனும் ஞானம் இங்கேயே நம்மிடமே
உள்ளது.
இதை அறியாமல் விளக்கு ஒளியை பெரிதாக எண்ணியபடி செல்லும் விட்டில் பூச்சி போல் , ஆசையால் உந்தப்பட்டு, விளக்கின் வெப்பத்தில் மடியும் அல்லது மடியப் போகும் இந்த ஞான சூனியங்களை என்ன என்பது?.

திருமூலர் நமக்களித்த , மனித வாழ்க்கைக்கு தேவையான உண்மையான இறைவிளக்கின் ஒளி பற்றிய தத்துவங்களை அவர் கூறும் ஒரு சில மந்திர விளக்கங்களை அடுத்து அடுத்து காண்போம்.

அதற்கு முன்னால் சித்தர்கள் அனைவருக்கும் குருவாகவும், தாயாகவும் விளங்கும் மந்திரபாவை அன்னையைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா ?

நம்முள் எத்தனை பேருக்கு தெரியும் மந்திரபாவை அன்னையைப் பற்றி !!!!

ஆகவே அவளை தரிசனம் செய்வோம் அடுத்த அத்தியாயத்தில்.

அதற்கு முன்பு மந்திரபாவை அன்னையை நேரில் தரிசனம் காண விருப்பமா ?

உடனே வாருங்கள் அன்னை மந்திரபாவையையும் , பதினெண் சித்தர் பெருமக்களாக கருதப்படும்

அகத்தியர் , தேரையர் , காளாங்கிநாதர்
போகர், கருவூரார், இடைக்காடர்
புலஸ்தியர், அழுகண்ணர், சட்டைமுனி

சிவவாக்கியர், மச்சமுனி , புலிப்பாணி
திருமூலர் , கொங்கணவர், இராமதேவர்
பாம்பாட்டி , பிண்ணாக்கீசர், கமலமுனி

அனைவரையும் ஒருங்கே வணங்கி ஆசிபெற நமது ஆலயத்திற்கு., அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

18 சித்தர்கள்

வரவிருக்கும் நிகழ்வுகள்

Amaavaasai

டிசம்பர் 30

Ankila varudappirappu

ஜனவரி 1, 2025

Ankila varudappirappu

ஜனவரி 1, 2026

Subscribe To Newsletter

* indicates required

News Archives

    வரவிருக்கும் நிகழ்வுகள்

    Amaavaasai

    டிசம்பர் 30

    Ankila varudappirappu

    ஜனவரி 1, 2025

    Ankila varudappirappu

    ஜனவரி 1, 2026