சித்தர் சன்னதிகள்
சித்தர்களின் பெருமை, மகத்துவம், மற்றும் ஆற்றலை யாராலும் விவரிக்க இயலாது. சிவனுக்கு ஒப்பானவர்கள் இவர்கள். தமது சித்தத்தால் எல்லா அண்டங்களையும் நினைத்தவாறு ஆட்டிப்படைக்கும் வல்லமை பெற்றவர்கள்.
மகரிஷிகள், தமது மன ஆற்றலால் ஒவ்வொரு சக்திக்குரிய காயத்ரி மந்திரத்தைப் படைத்து, தமது சீடர்களுக்கு உபதேசித்தது போல், முனிவர்கள் தமது மந்திர ஆற்றல்களால் வேள்விகள் புரிந்து சக்திகளை வசீகரித்தது போல், சித்தர் பெருமக்களை ஒரு எல்லைக்குள் அடக்க இயலாது.
சித்தர்கள் பெரும் கலைகளான வாதவித்தை, மந்திர கலைகள், மருத்துவ ஞானம், பரஞானயோகம் ஆகிய அனைத்து கலைகளிலும் உச்ச கட்ட ஞானம் அடையப் பெற்றவர்கள்.
இதில் வாதவித்தை என்பது மூலிகைகளையும், உலோகங்களையும் சேர்த்து, குளிகை மணியாக்கி, சகல சக்திகளையும் கூட்டிக் கொள்ளும் திறம் பெற்றவர்கள். சில உலோகங்களின் மீது, சில குறிப்பிட்ட மூலிகைச் சாறுகள் சேர்த்து, அந்த உலோகத்தை தூயதாக்கி, தங்கமாக மாற்றும் ஞானம் பெற்றவர்கள். இத்தங்கத்தை அவர்கள் பொருளாக பயன்படுத்தாமல் பஸ்பமாக்கி மானிடர்களின் நோயை நீக்க பயன்படுத்துவார்கள்.
சுவாசக்கலை எனும் வாசிக்கலையை முறையாக உணர்ந்து, இக்கலையின் மூலம் மனதையும், உடலையும் ஆளும் வலிமை பெற்றவர்கள். சுவாசத்தின் மூலம், சுவாசத்தை நீடிக்கவும், குறைக்கவும், அதிர்வுகளை மாற்றியும், பெறும் நாத ஒலிகளை, மந்திர கலைகளாக்கி சகலத்தையும் சாதிக்கும் சக்தி பெற்றவர்கள்.
மானிட உடலின் சூட்சும நாடிகள், தத்துவங்கள், உயிராற்றல் என யாவற்றையும் தெளிவாகக் கண்டறிந்து உடல் கூறு மகத்துவத்திலும் சாதனை புரிந்த முன்னோடிகள் பலதரப்பட்ட மூலிகைகளைக் கொண்டு, நோய்களின் குணங்களை கண்டறிந்து அதை நீக்கும் வல்லமை பெற்றவர்கள்.
யோகநிலையில் அமர்ந்து, அண்டங்களின் இயக்கங்களை, அதனை ஆட்டுவிக்கும் சக்திகளை, அதற்கு காரணமான ஆதாரப் பரம்பொருளைக் கண்டறிந்து அதனோடு தம் சக்தி ஆற்றலை கலக்கச் செய்து பரம்பொருளாகவே விளங்கக் கூடியவர்கள் மேற்கூறிய நான்கு கலைகளிலும் பல உட்பிரிவுகள் நிறைய உள்ளன.
இக்கலைகளை முழுதாக உணர்ந்து செயல்படும் ஆற்றல் மிக்கவர்களே சித்தர்பெருமக்கள் இந்த கலைகளில் ஏதேனும் ஒரு கலையில், ஒரு உட்பிரிவில், ஆராய்ச்சிகள் செய்து, அதனை சித்தர் சபையில் விளக்கி, சமர்ப்பித்து, அந்த சபை ஏற்றுக் கொண்ட பின்னரே, சித்தர் குழுவில் சித்தராக இடம் பெற இயலும்.
இதில் ஒவ்வொரு துறையிலும் உயர்ந்த நுட்ப அறிவு பெற்றவர்கள், சித்தர் குழுத்தலைவராக விளங்குவார்கள். இப்படி எண்ணற்ற துறைகளில், எண்ணற்ற குழுத் தலைவர்கள் இருந்தாலும், நமது தமிழ் மரபில், தமிழ் மொழியில், இக்கலைகளை பாடல்களாக எழுதியும், தமிழ் நாட்டில் தங்கி உபதேசித்துவந்த, 18 குழுத்தலைவர்களையே நமது ஆலயத்தில் 18 சித்தர் பெருமக்களாக, யோக நிலையில் வீற்றிருந்து, தம்மையும், ஆலயத்தையும் தேடி வரும் பக்தர்களுக்கும் அருளாசி புரிந்து வருகின்றனர்.