ஆலயத் தோற்றம்
ஆன்மீக சிந்தனைகள் உலகில் குறையும் பொழுது, அதனை சரிப்படுத்த, சித்தர்கள் தங்களது பேரருளால் பல்வகைச் செயல்களைப் புரிந்து, ஆன்மீக மார்கத்தை வளப்படுத்துவர்.
அற்புத செயல்களைப் புரியும் இறை அடியார்களாக அவதரித்தல், சுயம்பு சக்திகளை தோற்றுவித்தல், சிறப்பான ஆலயங்களை அமைத்தல் போன்ற பற்பல செயல்களைப் புரிந்து, தம்மை மறைத்து, மற்றவர்களை கருவிகளாகக் கொண்டு, பக்தி நெறியை தழைக்கச் செய்வர்.
இவ்வாறாகவே சிறப்பான ஆலயம் அமைத்தல் மூலம் பள்ளிக்கரணையில் அன்னை ஆதிபராசக்தியின் ஆலயத்தை சித்தர்கள் திருவருள் நோக்கில் அருள்வாக்கின் மூலம், ஆலய ஆகம விதிகள் வகுத்து, வெளியிடப்பட்டு, அதன்படி அமைக்கப்பெற்று, 12.04.1984ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா இனிதே நடைபெற்றது.
1984ஆம் வருடம் அன்னையின் அருளாசிப்படி சுமார் 1200 சதுர அடி நிலப்பரப்பில் அன்னையின் கருவறை மட்டும் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. காலப்போக்கில் விநாயகர் கருவறை, முகப்பு நுழைவாயில் மண்டபம், அன்னையின் கருவறை அந்தராளம் மற்றும் மகாமண்டபமும் அமைக்கப்பட்டன. பின்னர் அன்னையின் கருவறைக்குப்பின்புறமாக அழகிய தியான மண்டபம் கட்டப்பட்டது பின்னர் மந்திரப்பாவை அம்மன் கருவறை, அதற்கு முன்னால் மகாமண்டபமும் கட்டப்பட்டது. அனைத்து மண்டபங்களிலும் அழகிய அற்புதமான தெய்வ உருவ சுதை பணிகள் வண்ண வடிவில் அமைக்கப்பட்டது. பௌர்ணமி மற்றும் விஷேச காலங்களில் நமது ஆலயம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் பொருட்டு, மிகப்பெரிய அன்னதான சாலையும் கட்டப்பட்டது.
இந்த ஆலயத்தின் நித்திய பணிகளும், பராமரிப்புப் பணிகளும், வளர்ச்சிப் பணிகளும், சமுதாயப் பணிகளும் ஆலயம் வந்து தம் குறைகள் நீங்கி அன்னையை வணங்கி, பலன் பெற்ற அன்பர்கள் அளித்த காணிக்கைகளைக் கொண்டு மட்டுமே 30,000, சதுர அடியாக ஆலயம் விஸ்தீரிக்கப்பட்டு, செழுமையான வளர்ச்சியை பெற்றுள்ளது.
அறநிலையத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகளில் அறநிலைய பராமரிப்பு செலவுகளுக்குப் போக எஞ்சிய தொகைகள் யாவும் சமூக மற்றும் அறப்பணிகளுக்காகவே செலவிடப்படுகின்றது.
ஆகவே, பக்தர்கள் நமது ஆலயம் வந்து, தங்களுடைய குறைகள் தீர வேண்டி, விநாயகர், அன்னை ஆதிபராசக்தி, மந்திரப்பாவை அம்மன் மற்றும் 18 சித்தர்கள், மகாலட்சுமி அன்னை மற்றும் ஞான தேவியை வணங்கி அருளாசியைப் பெற்று நலமுடன் இன்புற்று வாழ வேண்டுகிறோம்.