வேள்விகளின் சிறப்பு (Yagnas/Yagyam/ Yaagam)
இறைவனால் இவ்வுலகில் படைக்கப்பெற்ற எல்லா உயிர்களும் அமைதியாகவும், சாந்தமாகவும், அனைத்து வளங்களையும் பெற்று எந்நாளும் மகிழ்வுடன் வாழ்வதையே இறைவன் விரும்புகிறார்.
ஆனால், அப்படி வாழ இயலாமல் ஏதேனும் ஒரு கவலை ஒவ்வொருவரையும் கஷ்டப்படுத்தத்தான் செய்கிறது. இதற்கு இறைவன் காரணமல்ல. நாம் அறிந்தும் அறியாமலும் எண்ணற்ற பாவங்களில் ஏதேனும் ஒன்றிரண்டோ அல்லது பலவோ, இப்பிறப்பிலோ, அல்லது முப்பிறப்பிலோ செய்ததே காரணம். அவைகளே, நம்மை கர்ம வினைகளாகத் தொடர்ந்து பாவத்திற்கு ஏற்ற பிரச்சினைகளைத் தருகின்றன.
இந்த கர்ம வினைகளில் இருந்து மனிதன் விடுதலை பெற பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன் கீதையின் மூலம் பல வழிகளை உபதேசித்துள்ளார். அவைகளில் ஒன்றாக வேள்விகள் செய்வதின் மூலம் கர்ம பலன்கள் அகன்று, நல்ல பலன்களைப் பெறும் சிறப்பை உணர்த்துகிறார்.
- தேவர்களை பணிந்து, அக்னி வளர்த்து அதன் மூலமாக அவர்களுக்குரிய ஹோம திரவியங்களை காணிக்கையாகச் செலுத்தி, தேவர்களை மகிழ்வித்து பலன் அடைவதை “தேவ யக்ஞம்” என்றும
- இறைவனை பக்தி பெருக்குடன் வழிபட்டு, இறைவனின் மந்திரங்களை நாள் தோறும் உச்சரித்து, தம்மால் இயன்ற பிரசாதத்தை தினமும் பயபக்தியுடன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்வதை “பிரம்ம யக்ஞம்” என்றும்
- நமது முன்னோர்கள் நல்ல கதியில் இருக்க வேண்டுமென்பதற்காக, அவர்களுக்கு நம்மால் முடிந்ததை நன்றியுடன் சமர்ப்பித்து வழிபடுவதை “பித்ரு யக்ஞம்” என்றும்
- பறவைகள், விலங்குகள், மற்றும் எல்லா இயற்கை செல்வங்களுக்கும் தாம் தீங்கு செய்யாமல் முடிந்த அளவு அவைகளுக்கு உதவியும், நன்மையும் செய்வதை “பூத யக்ஞம்” என்றும்
- நம்மை நாடி வரும் அதிதிகளுக்கு முடிந்த அளவு அவர்களின் பசி நீக்கி, உதவி செய்வதை
“அதிதி யக்ஞம்” என்றும்
இந்த ஐந்து யக்ஞங்களை பற்றி விளக்கி, இதில் ஏதேனும் ஒரு யக்ஞமாவது தமது வாழ்வில் தப்பாமல் செய்பவர்களுக்கு, அவர்களின் கர்ம வினைகள் விலகி, எப்பொழுதும் இன்பமுடன் வாழ்வார்கள் என உபதேசிக்கிறார். பழங்கால அரசர்களும், ரிஷிகளும் தாம் நினைத்த பேறுகளையும் சக்திகளையும் பெறுவதற்காக பலவித யக்ஞங்களை நடத்தி பலன்களை பெற்றதாக அறிவோம்.
இவ்வாறு மக்களும் தங்களின் கர்ம வினைகள், சாபங்கள், பாவங்கள், தோஷங்கள், குற்றங்கள் இவைகளில் இருந்து அறவே விடுபட்டு, எல்லாவிதமான செல்வங்களும் பெற்று, ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ, பலவிதமான பரிகார வேள்விகளை சித்தர்கள் வகுத்து வைத்துள்ளனர். அந்தந்த வேள்விக்குரிய தெய்வங்கள், மந்திரங்கள், ஹோம பொருட்கள், யாக கோணங்கள் அந்த வேள்வியின் மூலம் பெறும் பலன்கள் எல்லாம் தெளிவாகக் கூறியுள்ளனர்.